×

சிங்கப்பூரை மீண்டும் அச்சுறுத்தும் கொரோனா: தடுப்பூசி போட, முகமூடி அணிய அறிவுறுத்தல்

சிங்கப்பூர்: சிங்கப்பூரில் கொரோனா மீண்டும் வேகமாக பரவி வருவதால் மக்கள் அனைவரும் தடுப்பூசி போட்டு கொள்ளவும், முகமூடிகளை அணியவும் மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளனர். இதனால் மீண்டும் ஊரடங்கு அறிவிக்கப்படுமோ என்ற அச்சத்தில் மக்கள் ஆழ்ந்துள்ளனர். சீனாவில் கடந்த 2019ம் ஆண்டு கண்டறியப்பட்டதாக கூறப்படும் கொரோனா தொற்று சுமார் ஒன்றரை ஆண்டுகள் உலக நாடுகளை புரட்டி போட்டது. மக்கள் தடுப்பூசி போடுவது, முகமூடி அணிவது போன்றவையுடன் கொரோனா பரவாமல் தடுக்க விதிக்கப்பட்ட ஊரடங்கால் உலக நாடுகள் பொருளாதார ரீதியாகவும் மிகவும் பாதிக்கப்பட்டன. தற்போது அனைத்து நாடுகளிலும் கொரோனா பாதிப்பு குறைந்து விட்ட நிலையில், சிங்கப்பூரில் கடந்த சில தினங்களாக பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதுதொடர்பாக சிங்கப்பூர் சுகாதார அமைச்சகம் கடந்த வாரம் வௌியிட்ட அறிவிப்பில், “டிசம்பர் 2ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 32,035 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

இது இந்த ஆண்டு பதிவான அதிகளவு பாதிப்பு. இதற்கு முன் கடந்த மார்ச் மாதம் அதிகபட்சமாக ஒரு வாரத்துக்கு 28,410 பேர் பாதிக்கப்பட்டனர். தீவிர சிகிச்சை தேவைப்படும் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. இதனால் மருத்துவமனைகள் நிரம்பி வழிகின்றன” என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் சிங்கப்பூரில் பரவலாக சுவாசகுழாய் தொற்று, ஜலதோஷம், காய்ச்சல் உள்ளிட்ட பாதிப்புகள் கடந்த சில தினங்களாக தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதுகுறித்து தெரிவித்துள்ள மருத்துவர்கள், “மக்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்தவும், வௌியே போகும்போது கட்டாயம் முகமூடி அணிவது, சமூக இடைவௌியை கடைப்பிடிப்பது அவசியம், உடல்நிலை பாதிக்கப்பட்டவர்கள் வௌியே செல்வதை தவிர்க்க வேண்டும், அனைவரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் கவனமுடன் இருக்க வேண்டும்” என அறிவுறுத்தி உள்ளனர்.

 

The post சிங்கப்பூரை மீண்டும் அச்சுறுத்தும் கொரோனா: தடுப்பூசி போட, முகமூடி அணிய அறிவுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Singapore ,Corona ,Dinakaran ,
× RELATED பலத்த சூறைக்காற்று காரணமாக பெங்களூரு...